தூத்துக்குடி மாவட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளின் குழந்தை வளர்ச்சியைக் கண்காணிக்க உதவும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவியை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு ஸ்கேன் கருவியைத் தொடங்கிவைத்தார்.
இதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சண்முகநாதன், சின்னப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது, “தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட கணேஷ் நகர், மடத்தூர், திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் மொத்தம் 40 லட்சம் ரூபாய் செலவில், தலா 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் கர்ப்பிணிகளில் குழந்தை வளர்ச்சியைக் கணக்கிட்டு அதற்கு ஏற்றாற்போல் சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்" என்றார்.
மேலும் அவர், "கரோனாவால் உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் நமது நாட்டின் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டெடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பொருளாதார நிலையை சீர்செய்வதற்கு முன்னாள் ரிசர்வ் வங்கி அலுவலர் தலைமையில் தமிழ்நாடு அரசு வல்லுநர் குழு ஒன்றை அமைத்துள்ளது.
அந்தக் குழுவின் பரிந்துரையின்பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டாயிரத்து 700 குடிபெயர் தொழிலாளர்கள் வேலை செய்துவருகிறார்கள். அவர்களில் நான்காயிரத்து 107 பேர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஸ்கேன் கருவிகளைத் தொடங்கிவைத்த அமைச்சர் கடம்பூர் ராஜு இதுவரை 460 நபர்களை அவரவர் சொந்த மாநிலங்களான பிகார், ஜார்கண்டுக்கு சிறப்பு ரயில் மூலம் மாவட்ட நிர்வாகம் அனுப்பிவைத்துள்ளது. வெளிமாநிலங்களில் பணிபுரியும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழாயிரம் பேர் திரும்பி வந்துள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: 'வெவ்வேறு மாவட்டத்தில் இருக்கும் மாணவர்களும் தேர்வு எழுத நடவடிக்கை' - அமைச்சர் செங்கோட்டையன்!