தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேதமடைந்த மின்கம்பங்கள் புகார் அளித்த அமைச்சர் அனிதா.. சம்பவ இடத்திற்குத் தலை தெறிக்க ஓடிவந்த மின்வாரிய அதிகாரி..!

Minister Anitha Radhakrishnan: தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அனிதா ராதகிருஷ்ணன் சேதமடைந்த மின்கம்பங்கள் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசியில் புகார் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மின்வாரிய அதிகாரி விரைவில் மின்கம்பங்களின் சீரமைப்பு பணி நடைபெறும் என உறுதியளித்தது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கலெக்டருக்கு தொலைபேசியில் புகார் அளித்த அமைச்சர் அனிதா
கலெக்டருக்கு தொலைபேசியில் புகார் அளித்த அமைச்சர் அனிதா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2024, 10:30 PM IST

தூத்துக்குடி: கடந்தாண்டு டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதியில் தமிழ்நாடு தென்மாவட்டங்களில் குறிப்பாகத் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப் பதிவானது. தூத்துக்குடி மாவட்டத்தில் வெளுத்துவாங்கிய மழையால் மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் மழை நீரால் சூழப்பட்டு கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை மீனவ கிராமத்தில் மழை வெள்ளத்தால் ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் இன்று(ஜன.1) பெரியதாழை பகுதியில் கடலில் தூண்டில் வளைவு கூடுதலாக அமைத்துத் தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் அந்த பகுதிக்கு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு அப்பகுதிக்குச் சென்றார்.

அங்கு ஏற்கனவே உள்ள தூண்டில் வளைவு பாலத்துடன் இணைத்துக் கூடுதலாக 200 மீட்டர் நீளம் அமைத்துத் தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்பகுதியினை பார்வையிட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தொடர்ந்து அங்கு நின்ற மீனவர்கள் அவர்கள் தொடர்ந்து பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்த நிலையில், அவற்றை உடனே மாற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதைக்கேட்ட அமைச்சர் உடனே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீனவர்கள் கோரிக்கை குறித்துப் பேசினார். இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் லெட்சுமிபதி உறுதி அளித்தார். விரைவில் மின்கம்பங்கள் அனைத்தும் சரி செய்து தரப்படும் என்று மீனவர்களிடம் கூறிவிட்டு, தொடர்ந்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

இதற்கிடையில், அப்பகுதியை உள்ளடக்கிய உடன்குடி மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கணேசன் பெரியதாழையில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட இடத்திற்குத் தலை தெறிக்க ஓடி வந்தார். அப்போது அவர் மாவட்ட ஆட்சியரிடம் மின்கம்பங்கள் சேதம் குறித்து தாங்கள் தொலைப்பேசியில் பேசியதையடுத்து அப்பகுதிக்கு விரைந்ததாகத் தெரிவித்தார். மேலும் விரைவில் இந்த மின்கம்பங்களைச் சீரமைத்து புதிய மின்கம்பங்களை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அமைச்சரிடம் உறுதி அளித்தார். இதனால் பெரியதாழை பகுதி மீனவர்கள் நெகிழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க:வீட்டிற்கு முன் இருந்த இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர்: கையும் களவுமாக போலீசாரிடம் சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details