தூத்துக்குடி:கடந்த 2001 - 2006ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலக்கட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூபாய் 6 கோடியே 50 இலட்சம் மதிப்பிலான 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியது. இவ்வழக்கை தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக இணைக்க கோரி அமலாக்கத் துறை, கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை 90% முடிவடைந்து உள்ளதால், இதில் அமலாக்க துறையை சேர்த்துக் கொள்ள முடியாது என லஞ்ச ஒழிப்பு துறையினர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.