தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வந்திருந்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, இனாம் மணியாட்சி கூட்டுறவுச் சங்கத்தில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, மாவட்ட சைல்டு ஹெல்ப் லைன் மூலம் பாதிப்புக்குள்ளான 65 குழந்தைகளின் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதைத் தொடங்கி வைத்த அமைச்சர், தொடர்ந்து பாண்டவர் மங்கலம் ஊராட்சியில் 150 பேருக்கு அரிசி, காய்கறி தொகுப்புகளை வழங்கினார்.
பின்னர், நகராட்சி அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர்கள் மணிகண்டன், பாஸ்கரன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் அனிதா, நகராட்சி ஆணையாளர் ராஜாராம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, "அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தீப்பெட்டி ஆலைகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனைச் சார்ந்த தொழில்களுக்கும் அனுமதி வங்கியுள்ளோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூகப் பரவல் இன்னும் தொடங்கவில்லை. தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு உரிய விதிமுறைகளின்படி, சமூக இடைவெளியை கடைப்பிடித்து இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள 600 ரேபிட் கிட் வழங்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி கட்டண உயர்வு குறித்து முதலமைச்சர் மத்திய அரசின் கவனத்துக்கு நிச்சயம் எடுத்துச்செல்வார்" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் மாவட்ட ஆட்சியர் நந்தூரியும், அமைச்சர் ராஜுவும் நேரில் சென்று விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க :‘அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்’ - ஸ்டாலின் காட்டம்