தூத்துக்குடி: தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்கள் திசைமாறி மாலத்தீவு கடல் எல்லைக்குள் சென்றதையடுத்து, மாலத்தீவு கடற்ப்படையினர் தமிழ்நாடு மீனவர்களை கைது செய்ததுடன் அவர்களின் படகுகளையும் கைப்பற்றியது. இது குறித்து இரு நாடுகளிடையே நடத்தப்பட்டப் பேச்சுவார்த்தையில் 2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரத்து 190 ரூபாய் அபராதம் கட்டினால் தான் படகு விடுக்கப்படும் என்று தன் முடிவைத் தொடர்ந்து தீர்க்கமாகத் தெரிவித்துவருகிறது.
தருவைகுளம் மீனவ கிராமத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தருவை குளத்தைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில் கடந்த அக் 1ஆம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த உதயகுமார்(31), தூத்துக்குடி வேம்பார் பகுதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ்(21), அந்தோணி ஆன்சல் கிறிஸ்டோபர்(22), அதிசய பரலோக திரவியம்(25), மதுரையைச் சேர்ந்த மாதேஷ் குமார்(15), தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி செல்வசேகரன்(23), ஆதிநாராயணன்(20), மகேஷ்குமார்(24), சிலுவை பட்டி பகுதியைச் சேர்ந்த அன்பு சூசை மிக்கேல்(48), விக்னேஷ்(31) மற்றும் மணி, சக்தி உட்பட மொத்தம் 12 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
அப்போது, கடலுக்குள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது புயலின் காரணமாக கடந்த 20.10.2023 அன்று திசைமாறி மாலத்தீவு கடல் எல்லைக்குள் சென்று விட்டனர். இதையடுத்து 12 மீனவர்களையும் மாலத்தீவு கடலோர காவல் படையினர், கைது செய்ததுடன் படகையும் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், இந்தியா-மாலத்தீவு ஆகிய இருநாடுகளுக்கிடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருநாடுகளிடையேயான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீனவர்களை விடுவிக்க மாலத்தீவு அரசு முன்வந்த நிலையில், கைப்பற்றிய படகை விடுவிக்க மாட்டோம் என கூறினர். இதனைக் கேட்ட மீனவர்கள் ஊருக்கு (இந்தியா) சென்றால் படகுடன் தான் செல்வோம் எனக் கூறி வருகின்றனர்.
மேலும், மாலத்தீவு எல்லைக்குள் மீன்பிடித்ததற்காக 2 லட்சம் ரூபியாவும் (ரூபியா என்பது மாலத்தீவு நாட்டின் பணவிகித சொற்றொடர்) , வலை உபயோகித்து மீன் பிடித்ததற்காக 20லட்சம் ரூபியாவும், அந்நாட்டு உரிமம் இல்லாமல் அக்கடல் பகுதியில் இருந்ததற்காக சுமார் 20 லட்சம் ரூபியாவும் மொத்தமாக இந்திய மதிப்பில் 2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரத்து 190 ரூபாய் அபராதம் கட்டினால் படகுகளை விடுவிக்க முடியும் என்று அந்நாட்டு அரசு கூறி வருகிறது.
இந்த நிலையில், ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அந்தோணி ஜெயபாலன் மற்றும் தனியார் ஷிப்பின் நிறுவனத்தின் உரிமையாளர் கிஷோர் ஆகிய இருவரும் மாலத்தீவு நாட்டில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் 2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரத்து 190 ரூபாய் அபராதம் கட்டினால் தான் படகு விடுவிக்கப்படும் என்று திட்டவட்டமாக மாலத்தீவு தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா; அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு!