நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து ஏர்வாடியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இன்று காலை தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இரண்டு இடைதேர்தல்களிலும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சி தீவிரமான தேர்தல் பரப்புரை செய்து வருகிறது. திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.
தமிழ்நாட்டை ஆளக்கூடிய எடப்பாடி பழனிசாமி அரசு எல்லா வகையிலும் தோற்றுவிட்ட ஒரு அரசாக இருக்கிறது. மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு சேவகம் செய்வதை மட்டுமே வழக்கமான பணியாக எடப்பாடி பழனிசாமி அரசு மேற்கொண்டு வருகிறது.
எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளுக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நாங்குநேரி தொழிற்பூங்கா எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பு முதலீடுகளில் ஈர்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நாங்குநேரி தொகுதியில் எந்த விதமான தொழில் முதலீடும் கொண்டுவரவில்லை என்பது அந்த பகுதி மக்களிடையே மிகப் பெரிய வருத்தமாக இருக்கின்றது.
அதேபோல தாமிரபரணி-நம்பியாறு திட்டம் கூட திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதற்காக அதையும் கிடப்பில் போட்டு விட்டார்கள். எனவே நிச்சயமாக இந்த தேர்தலிலே நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர் அமோக ஆதரவை பெறுவார்கள்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் சில முஸ்லிம் ஜமாஅத் தலைவர்கள் மனு அளிப்பதற்காக சென்றிருக்கிறார்கள். ஆனால் முஸ்லிம் ஜமாஅத் தலைவர்களை உதாசீனப் படுத்தி இருக்கிறார். இதற்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது முதலைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதையும் படிக்க: கமல்ஹாசனின் கருத்துக்கு டி.டி.வி. தினகரன் வரவேற்பு