தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு இடையே மீண்டும் பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து, வருகிற ஜனவரி மாதம் முதல் தொடங்க உள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை மையமாகக் கொண்டு, தூத்துக்குடி - இலங்கை காங்கேசன்துறை, தூத்துக்குடி - கொழும்பு, ராமேஸ்வரம் - தூத்துக்குடி - கன்னியாகுமரி இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது.
இதற்காக துபாயில் உள்ள தனியார் நிறுவனத்துடன் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், மும்பையில் நடந்த சர்வதேச கடல்சார் உச்சி மாநாட்டில், மத்திய துறைமுகங்கள் கப்பல் நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சார்பானந்த சோனாவால் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
முதல் கட்டமாக, தூத்துக்குடி - இலங்கை காங்கேசன் துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஜனவரியில் தொடங்கப்படுகிறது. இதற்கான கப்பல் விரைவில் தூத்துக்குடிக்கு வரவுள்ளது. தொடர்ந்து தூத்துக்குடி- கொழும்பு, ராமேஸ்வரம்- தூத்துக்குடி-கன்னியாகுமரி இடையே கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நான்காவது முறையாக செந்நிறமாக காட்சியளித்த புதுச்சேரி கடல்!
மேலும், இந்த கப்பலானது, தினசரி 120 கடல் மைல் தொலைவை மூன்று முதல் நான்கு மணி நேரத்தில் கடக்கும். அதில், எக்கனாமிக் கிளாஸ் 350 பயணிகள் (ஒரு டிக்கெட் ரூ.6000), பிசினஸ் கிளாஸ் 50 பயணிகள் (ஒரு டிக்கெட் ரூ.12,000) என 400 பயணிகள் மற்றும் 40 கார்கள் 28 பஸ் மற்றும் டிரக்குகள் கொண்டு செல்ல முடியும்.
சுற்றுலாவிற்குச் சொந்தமான கார்கள் மற்றும் பேருந்துகளில் செல்பவர்கள், தங்கள் கார்கள் மற்றும் பேருந்துகளையும் கப்பலில் ஏற்றி இலங்கைக்கு கொண்டு சென்று, மீண்டும் திரும்பி வர முடியும். சொகுசு கப்பலில் வரி இல்லாத விற்பனைக் கடைகள் (டியூட்டி ஃப்ரீ ஷாப்), ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து காலையில் புறப்பட்டு, பகல் வேளையில் இலங்கையைச் சென்றடையும். பிறகு பிற்பகலில் இலங்கையின் காங்கேசன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, தூத்துக்குடிக்கு இரவு வந்த அடையும். இந்த கப்பலில் பயணிகள் விமானத்தில் பயணிக்கத் தேவைப்படுவது போல விசா, பாஸ்போர்ட் கட்டாயம் வேண்டும். அதேபோல் 80 கிலோ எடையை மட்டுமே பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இதையும் படிங்க: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு.. மிசோரம், சத்தீஸ்கரில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம்!