தூத்துக்குடி: விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டட வைப்பாற்று ஆற்றுப்படுகையில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, 25 லட்சம் பன விதைகள் நடவு செய்யும் பணி தொடக்க விழா நடைபெற்றது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு, பன விதைகள் நடவு செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய கனிமொழி எம்பி, “தமிழ்நாட்டின் வனப்பரப்பினை 23.8 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உருவாக்கி காட்ட வேண்டும் என்ற உறுதியோடு முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் பிரதிநிதிகள் அவருக்கு உறுதுணையாக இருந்தால் 33% ஏன், அதைவிட அதிகமாக உருவாக்க முடியும். மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக பாடுபட்டு கொண்டிருக்கிறோம்.
அதுதான் கிடைக்கவில்லை. உள்ளாட்சியில் 50% மகளிருக்கு இட ஒதுக்கீடு கிடைத்து விட்டது. 33%ஐ விட்டுவிட்டு 50% வனப்பரப்பினை உயர்த்த பாடுபடுவோம். முதலமைச்சரின் கனவை நிறைவேற்றும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தை முன்னுதாரணமாக உருவாக்க முடியும்.
ஆக்கக்கூடிய கடவுள் பிரம்மன், காக்கக்கூடிய கடவுள் விஷ்ணு, அழிக்கக்கூடிய கடவுள் சிவன் என்று கூறுவார்கள். ஆக்கக்கூடிய கடவுளை விட பாதுகாக்கக்கூடிய விஷ்ணுவுக்குத்தான் மரியாதை அதிகம். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரியும் சிவனும் ஒன்று என நம்பக்கூடிய பெரும்பான்மையான மக்கள் இங்கு உள்ளனர்.