தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பைப் லைன் தோண்டும் பணியின்போது மண் சரிந்து விழுந்து கூலித்தொழிலாளி பலி; உறவினர்கள் சாலை மறியல் - உறவினர்கள் சாலை மறியல்

தூத்துக்குடியில் மாநகராட்சி கழிவு நீர்த்தொட்டி பைப் லைன் தோண்டும் பணியின்போது மண் சரிந்து விழுந்து கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

பைப் லைன் தோண்டும் பணியின் போது மண் சரிந்து விழுந்து கூலி தொழிலாளி பலி; உறவினர்கள் சாலை மறியல்
பைப் லைன் தோண்டும் பணியின் போது மண் சரிந்து விழுந்து கூலி தொழிலாளி பலி; உறவினர்கள் சாலை மறியல்

By

Published : Jul 28, 2022, 9:04 PM IST

தூத்துக்குடி: தருவை குளம் தெற்கு பகுதியைச்சேர்ந்தவர் கடற்கரை என்கிற வெள்ளபாண்டி (46). கூலித்தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 2ஆண், 1பெண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

தூத்துக்குடி-ராமேஸ்வரம் சாலையில் உள்ள தருவைகுளம் ரோட்டில் மாநகராட்சிக்குச்சொந்தமான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இன்று காலை மாநகராட்சி சார்பில் ஒப்பந்த அடிப்படையில், அங்கு உள்ள தொட்டிக்கு பைப் லைன் போடும் பணியில் வெள்ளபாண்டி உட்பட 4 பேர் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது குழி தோண்டி கொண்டு இருக்கும்போது எதிர்பாராத விதமாக கடற்கரை என்ற வெள்ளபாண்டியின் மேல் மண் சரிந்து விழுந்துள்ளது. இதில் அவருடன் வேலை செய்து வந்த 3 பேரும் அவரை காப்பாற்ற முயற்சி செய்யாமல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதனால் வெள்ளபாண்டி மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் தாளமுத்து நகர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி ஆம்புலன்ஸில் ஏற்ற முற்பட்டனர். இதனைக்கண்டித்து கடற்கரை என்ற வெள்ளபாண்டி உறவினர்கள் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றக்கூடாது என மாநகராட்சியைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர், தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இதனை ஏற்காத உறவினர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து நொறுக்கிய நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி DSP சத்யராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை கைது செய்வோம் எனக் கூறிய நிலையில், உறவினர்கள் கலைந்து சென்றனர்.

பின்னர் வெள்ளபாண்டி உடல் ஆம்புலன்ஸ் மூலமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. சம்பவ இடத்தை DSP சத்யராஜ் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். தப்பியோடிய மூவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:காதல் ஜோடி வெட்டிக் கொலை - பெண்ணின் தந்தை வெறிச்செயல்

ABOUT THE AUTHOR

...view details