கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் ராஜஸ்தான் மாநிலம் வில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் குல்பி ஐஸ் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். குமரி பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் கோடை காலத்தில் குல்பி ஐஸ் விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.
உணவு உள்ளிட்ட உதவிகள் ஏதும் கிடைக்காமல் தவித்து வந்தனர். தற்போது, மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் செல்ல முடிவெடுத்து முதற்கட்டமாக 36 பேர் குழந்தைகளுடன் தங்களது இருசக்கர வாகனத்தில் அதிகாலையில் புறப்பட்டனர். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டவர்கள், தூத்துக்குடி எல்லைச் சோதனை சாவடியான பருத்திகுளம் அருகே வந்த போது கயத்தார் காவல் துறையினர் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், தாங்கள் கன்னியாகுமரி பகுதியில் குல்பி ஐஸ் வியாபாரம் செய்து வருவதாகவும், ஊரடங்கினால், தங்களது வாழ்வாதாரம் இழந்து மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால், சொந்த ஊருக்கு செல்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயத்தாறு காவல் ஆய்வாளர் முத்து, வட மாநிலத்தவர்களுக்கு காலை உணவு, முகக்கவசம் ஆகியவற்றை வழங்கி காவல் உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.