தூத்துக்குடி: குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த தசரா திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறக்கூடிய தசரா திருவிழாவில் நாள்தோறும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் 5ஆம் நாளான இன்று (அக்.01) அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.