தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இந்த ஆண்டு கரோனா பாதிப்பால் பக்தர்கள் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இந்து மக்கள் கட்சியினர் சார்பில் இன்று (அக். 05) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதில், "குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்து மக்கள் கட்சியினர் மனு இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வசந்தகுமார் தெரிவித்ததாவது, "மைசூரு தசரா திருவிழாவிற்கு அடுத்து தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா உலகப்புகழ் பெற்றது.
இதில் பக்தர்கள் பங்கேற்று பல்வேறுவிதமான வேடங்களை அணிந்து அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். எனவே தசராவில் பக்தர்கள் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கேள்விக்குறியான தகுந்த இடைவெளி: கங்கா தசராவில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!