தூத்துக்குடி: கத்தோலிக்க மறை மாவட்டம் கடந்த 1923ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி மறை மாவட்டத்தின் கீழ் 118 பங்குகள் உள்பட 4.75 லட்சம் இறை மக்கள் உள்ளனர். இந்த நிலையில், தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டம் தொடங்கப்பட்டதன் நூற்றாண்டு விழா நேற்று (ஜூன் 10) தூத்துக்குடி வஉசி சாலையில் உள்ள சின்னகோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “சமய, சமூக நல்லிணக்க விழாவை கொண்டாடி வருகிறோம். இந்த நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டும் என ஒரு கூட்டம் பல்வேறு சதித் திட்டங்களை செய்து வருகிறது. இந்த கூட்டத்தில் என்னால் எழுத முடிகிறது, பேச முடிகிறது என்றால், அது மறை மாவட்டப் பள்ளிகளால் என்று பெருமையாக சொல்ல முடியும். நான் படித்ததுகூட ஒரு கிறிஸ்தவப் பள்ளியில்தான்.
மத மாற்ற தடைச் சட்டம் கொண்டு வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாகூட கிறிஸ்தவப் பள்ளியில்தான் படித்தார். மேலும், என்னுடன் பல்வேறு மதத்தைச் சேர்ந்த மாணவிகள் படித்தார்கள். ஆனால், ஒருவர் கூட மதம் மாறவில்லை. படித்துக் கொண்டிருந்தபோது பெரியாரின் கொள்கைகள் பிடித்து மதமே வேண்டாம் என பெரியாரின் வழியை தேர்ந்தெடுத்தது நான்தான்.
அங்கே படித்தவர்கள் யாரும் மதம் மாறவில்லை. அதன் பின்பும் மதம் மாறவில்லை. ஒரு சிலர் பொய் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். இதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். 18 சாதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு உடலை மறைத்துக் கொள்ள உரிமை இல்லாமல் இருந்தது.
அந்த பெண்கள் 'தான் என்ன உடுத்துவேன்' என தான் தீர்மானிப்பேன், தான் மேலாடை அணிவிக்க தடுக்கக் கூடாது என போராடிய நேரத்தில், அவர்களோடு உறுதுணையாக இருந்தது கிறிஸ்தவ திருச்சபைதான். பெண்களின் சுதந்திரத்திற்காக உரிமைக் குரலோடு உடன் இருந்தது திருச்சபைகள்தான்.
ஒரு காலகட்டத்தில் எல்லோரும் படிக்க முடியாத சூழ்நிலையில் எல்லோரும் படிக்கலாம் என்பதை உருவாக்கியது திருச்சபைகள்தான். அதிலும், பெண்கள் கல்வியை அதிகம் ஊக்கப்படுத்தியது திருச்சபைகள்தான். இந்த திருச்சபை தற்போது நூறு ஆண்டுகளைக் கடந்திருக்கிறது.