தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் தேவை, குடிநீர் சிக்கன நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீர் சேமிப்பு விழிப்புணர்வு குறும்படம் வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு செய்தி; விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குடிநீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு குருந்தகட்டை வெளியிட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ”தூத்துக்குடி மாவட்டத்திற்கு, மறைந்த குரூஸ் பெர்னாண்டஸ்தான் முதன்முதலில் முதலாவது பைப்லைன் திட்டம் மூலமாக குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். அதைத் தொடர்ந்து அதிமுக அரசுதான் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இரண்டாவது, மூன்றாவது, நான்காவது குடிநீர் பைப்லைன் திட்டங்களை கொண்டு வந்து தூத்துக்குடி மாவட்ட மக்களின் தண்ணீர் தேவையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுத்தது.
அதிமுக அரசு காலத்தில்தான் 282.44 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் தேவைக்காக வல்லநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றுப் படுகையிலிருந்து நீர் உறிஞ்சப்பட்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு தொலைநோக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.