தூத்துக்குடி:தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று வேட்புமனு தாக்கல் பரிசீலனை நடைபெற்றது.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் 12 வார்டுகளுக்கு 33 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இன்றைக்கு வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 1ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெயராஜ், 2ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் சண்முகலெட்சுமி, 11ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் சின்னத்துரை ஆகியோர் வேட்பு மனுக்களில் முன்மொழிந்தவர்கள் கையெழுத்து போலியாக இருப்பதாகப் புகார் எழுந்தது.
திமுகவினரின் மனுவில் போலி கையெழுத்து!
மேலும் முன் மொழிந்தவர்கள் வெளியூரில் இருப்பதாகவும், அவர்கள் கையெழுத்தினை போலியாக போட்டுள்ளதாகக் கூறி, மற்ற வேட்பாளர்கள் குற்றச்சாட்டு கூறியதைத் தொடர்ந்து மூன்று பேரின் வேட்பு மனு பரிசீலனையை தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் குமார் நிறுத்தி வைத்து இருந்தார்.
3 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும், அவர்கள் மீது காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மற்ற வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் 3 பேரும் வேட்பு மனுவில் முன்மொழிந்ததாக கூறப்படுவர்கள் நேரில் வந்து தங்களுடைய கையெழுத்து இல்லை, போலியாக போடப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்தனர்.