தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மீனவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவப் பிரதிநிதிகளுடனான பேச்சுவாா்த்தையில் ஆட்சியா் சந்தீப் நந்தூரி பேசுகையில், "தூத்துக்குடிக்கு முதலமைச்சர் வருகையின்போது மீனவ கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூண்டில் வளைவுகள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை அறிவிக்கவுள்ளாா்.
மேலும், ராக்கெட் ஏவுதளம் மீனவ மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவதால், அவா்களின் அச்சத்தை போக்கும் வகையில், அந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவா்களை வைத்து எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விளக்க கூட்டம் விரைவில் நடத்தப்படும். இதுதவிர, ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் அருகே உள்ள மீனவ கிராமங்களிலிருந்தும் மீனவா்களை அழைத்து வந்து அவா்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளதை விரிவாக நம் பகுதி மீனவா்களுக்கு விளக்கப்படும்.