தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 32ஆவது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாசலம் தலைமை வகித்தார். திருவனந்தபுரம் இஸ்ரோ திரவ உந்துகை அமைப்பு மையத்தின் இயக்குநர் விஞ்ஞானி வி.நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
நேஷனல் பொறியியல் கல்லூரியில் 32-வது பட்டமளிப்பு விழா அதில் நாராயணன் பேசுகையில், ''இளம் பட்டதாரிகள் ஒவ்வொரு துறையிலும் நடைபெறும் தொழில்நுட்ப மாற்றங்களை அறிந்திருக்க வேண்டும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்காகவும் ஏதோ ஒரு வகையில் இஸ்ரோ சேவை செய்து வருகிறது. ஓரே விண்வெளி பயணத்தில் 104 விண்கலன்களை வெற்றிகரமாக ஏவி அறிமுகப்படுத்தியது இந்தியாதான். சந்திராயன் 1 இங்கிருந்து 4 லட்சம் கி.மீ., கடந்து சென்று, சந்திரனை சுற்றி வந்து அங்கு தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்தது. இதையும் உலகத்தில் முதன்முறையாக செய்தது இந்தியா தான்.
மங்கள்யான் 68 கி.மீ. கோடி கி.மீ. வெற்றிகரமாக பயணித்து முதல் முறையிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்தது. மற்ற நாடுகளும் வெற்றியடைந்துள்ளன. ஆனால் முதல் முறையிலேயே அந்த வெற்றி அவர்களுக்கு கிடைக்கவில்லை. சந்திராயன் 2, 98 சதவீதம் வெற்றிகரமாக இருந்தது. இதில் உலகின் மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட கேமரா உள்ளது. 2022 ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்னர் மூன்று இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பவும், அவர்களை பாதுகாப்பாக திரும்பக் கொண்டு வரும் திட்டத்தில் இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. இன்னும் இரண்டரை ஆண்டுகளில் 50 செயற்கைக்கோள்கள் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது'' என்றார்.
தொடர்ந்து, 615 மாணவர்களுக்கு இளநிலை பொறியியல் பட்டங்களையும், 15 மாணவர்களுக்கு முதுநிலை பொறியியல் பட்டங்களையும், 18 ஆராய்ச்சி மாணவர்களுக்கு முனைவர் பட்டங்களையும் விஞ்ஞானி நாராயணன் வழங்கினார். பட்டம் பெற்றவர்களில் 39 இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்கள் தன்னாட்சி தரவரிசைப்பட்டியலில் இடம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சந்திராயன்-3 திட்டத்தின் இயக்குநராக விஞ்ஞானி வீரமுத்துவேல் நியமனம்!