தூத்துக்குடி: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் கடந்த 17 மற்றும் 18 அகிய தேதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வரவாறு காணாத மழை பெய்ததால் கடுமையான வெள்ள பாதிப்புக்கு உள்ளாக்கியது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களை மீட்கும் பணிகளை மாநில அரசுடன் சேர்ந்து இந்திய கடலோர காவல் படையினரும், இந்திய ராணுவத்தினரும் அயராது செய்து வருகின்றனர். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு அத்தியவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் தீவிரமாக மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.
இந்திய கடலோர காவல் படை:இந்திய கடலோர காவல் படையினரால் மதுரையில் டோர்னியர் விமானம் மற்றும் ஏஎல்எச் ஹெலிகாப்டர்கள் நிலை நிறுத்தப்பட்டு உடனுக்குடன் தேவையான மீட்பு பணிகளை செய்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசுடன் ஒருங்கிணைந்து வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள மக்களுக்கு இரண்டு ஹெலிகாப்டர்களில் 600 கிலோ உணவு பொருட்களை நேற்று (டிச.19) இந்திய கடலோர காவல்படை வழங்கியது. அதனை தொடர்ந்து இன்றும் (டிச.20) நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த 800 மணி நேரத்தில் சுமார் 1000 கிலோ நிவாரண பொருட்களை மூன்று ஹெலிகாப்டர்கள் மூலம் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். மேலும், தூத்துக்குடி விமான நிலையம் திறக்கப்படவுள்ள நிலையில் தமிழக அரசுடன் கலந்துரையாடி மேலும் அதிகாமான ஹெலிகாப்டர்களை கொண்டு மீட்பு பணிகளை செய்வதன் மூலம் தூத்துக்குடியில் உள்ள துண்டிக்கப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை எடுத்து செல்ல முடிவு எடுத்துள்ளனர்.
இதற்கிடையில், அதித வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் இருப்பதால் அவர்களுக்கு உதவும் வகையில் இந்திய கடலோர காவல் படையினர் 8 குழுக்களாக பிரிந்து உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். இதில் மருத்துவ உதவி தேவைப்படும் நபர்களை மீட்பு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.