தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடை வெயில் காரணமாக தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு; உரியவிலை பெற்றுத்தர கோரிக்கை! - Summer heat

கோடை வெயில் காரணமாக தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதாக உப்பு தொழிலாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat கோடை வெயில் காரணமாக தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு
Etv Bharat கோடை வெயில் காரணமாக தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு

By

Published : Apr 19, 2023, 4:31 PM IST

கோடை வெயில் காரணமாக தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு

தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள வேம்பார், முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி ஆகியப் பகுதிகளில் 20 ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இதில், சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில், குஜராத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி தான் உப்பு உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கிறது.

தூத்துக்குடி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு அனைத்தும் உணவில் சேர்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இங்கே ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தொடங்கும் உப்பு உற்பத்தியானது அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வரையில் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகம் என்பதாலும் கடந்த 2 மாதத்துக்கு முன்பே உற்பத்தியை தொடங்கிவிட்டனர். இதனால், உப்பு விலை கடுமையாக சரிந்துள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து உப்பு தொழிலாளர்கள் சங்க தூத்துக்குடி மாவட்ட பொதுச் செயலாளர் (சிஐடியு) சங்கரன் கூறுகையில், “இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்து தூத்துக்குடி தான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தூத்துக்குடி கடற்கரை ஓரமாக இருப்பதால் இந்த கடற்காற்றுக்கும், மேற்காற்றுக்கும் உப்பு விளையும்.

இந்த தூத்துக்குடி உப்பைப் பொறுத்த அளவில் அயோடின் கலக்காத உப்பு, இதனை உணவில் அப்படியே போட்டு உண்ணலாம். மலைப்பிரதேசத்தில் தான் அயோடின் கலந்த உப்பு தேவை, தமிழ்நாடு சம அளவு கொண்டதால் அயோடின் கலக்காமல் உண்ணலாம் என்பது மருத்துவர்களின் கருத்து.

இந்த வருடம் உப்பு உற்பத்தி ஜனவரி மாதமே தொடங்கி விட்டது. இந்த ஆண்டு மழையானது பெரிய அளவில் இல்லை. அதனால், மராமத்துப் பணியும் பெரிய அளவில் இல்லை. கடந்த ஆண்டு உப்பு ஒரு டன் 4 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை இருந்தது. தற்போது பல இடங்களில் உப்பு உற்பத்தி பெருக்கம் அதிகமானதால் டன் ஆயிரம் ரூபாயிலிருந்து ஆயிரத்து 500 ரூபாய் வரை இருக்கிறது.

ஆகவே, சிறு உப்பளத் தொழிலாளர்களுக்கு மானியத்தில் மின்சாரம் வழங்க வேண்டும். உப்பு உற்பத்தி அதிகமாக இருப்பதால் பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு போக நடவடிக்கை எடுக்கலாம். தொழிலாளர்களுக்கு ஒரு நாள் கூலி 500 ரூபாய் அதிலும் வாரத்திற்கு 4 நாட்கள் தான் பணி, ஆகவே, அரசு உப்பு தொழிலாளர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:கருங்காலி, நிலவேம்பு மரங்களின் மகத்துவத்தை போற்றும் வகையில் கைவினைப்பொருட்கள் செய்யும் இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details