தூத்துக்குடி:தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி அலுவலகத்தில் சென்னை புலனாய்வு மற்றும் குற்றவியல் விசாரணை பிரிவு இயக்குநரக வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று (ஜூன் 27) காலை 10:30 மணி முதல் தொடர்ந்து சோதனை செய்து வந்தனர்.
இந்த சோதனையில் வங்கி அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் ஆகியவற்றை சரிபார்த்து வங்கி அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். நேற்று காலை 10:30 மணி முதல் ஆரம்பித்த இந்த சோதனையானது இன்று காலை வரை விடிய, விடிய தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இன்று (ஜூன் 28) காலை 6:10 மணிக்கு முடிவடைந்தது. மேலும், அதிகாரிகள் சோதனையில் கைப்பற்றப்பட்ட பல ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பைகளில் எடுத்து சென்றனர். வருமானவரித்துறை அதிகாரிகளிடம் இந்த திடீர் சோதனைக்கான காரணம் குறித்தும், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் கேட்ட போது தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தலைமையிடத்தில் நடைபெற்ற சோதனை குறித்து வங்கியின் தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் கோரிய விளக்கங்கள் மற்றும் விவரங்களுக்கு பதிலளித்து, தேவையான தகவல்களை தொடர்ந்து வழங்குவோம். வங்கியின் வணிகச் செயல்பாடுகள் வழக்கம் போல் தொடர்ந்தன. மேலும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.