தூத்துக்குடி: புதிதாக உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்ட கடலோரம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் எனத் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
அந்தவகையில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று முன்தினம் (டிச.16) நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை முதல் அதி கனமழை பெய்து வருகிறது.
இதனால் தென் மாவட்டங்களில் இருக்கும் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில், பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு போன்ற அணைகளின் மதகுகள் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.
மேலும், தற்போது பெய்து வரும் கனமழை தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப் பொழிவாகக் கருதப்படுகிறது. குறிப்பாகத் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 932 மி.மீ அளவு மழைப் பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க:நெல்லை கன்னடியன் அணைக்கட்டிலிருந்து 1000 கன அடி வெள்ள நீர் கால்வாயில் பரிசோதனைக்குத் திறப்பு..!
இந்த மழைப்பதிவு தான் தமிழகத்தில், 24 மணி நேரத்தில் அதிக அளவு பதிவாகிய மழை என்றும் கூறப்படுகிறது. மேலும் இது கடந்த 1992ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் மாஞ்சோலை அடுத்த காக்காச்சி பகுதியில் பதிவாகிய மழையைவிட அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மாவட்ட பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பல பகுதிகள் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நெல்லை - பாபநாசம், நெல்லை - திருச்செந்தூர், நெல்லை - தூத்துக்குடி ஆகிய வழித்தடங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், நகர் பகுதிகளில் இருந்து கிராமங்களை இணைக்கும் அரசு பேருந்து சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை - தூத்துக்குடி இடையே இயங்கும் முத்துநகர் விரைவு ரயில், புது டெல்லி - கன்னியாகுமரி இடையேயான திருக்குறள் விரைவு ரயில் ஆகிய ரயில்கள் கோவில்பட்டி ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் இருமார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க:அதி கனமழை எதிரொலி: தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து!