தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர்த்தியாகம் செய்த 11ம் வகுப்பு மாணவி நூலினுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி, சகாய அன்னை தேவாலயத்தில் நடைபெற்றது. இதில் தமிழ் பேரரசு கட்சித் தலைவரும், இயக்குனருமான கௌதமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர், செய்தியாளர்களிடம் கௌதமன் கூறுகையில், "2018 ஆம் ஆண்டு, மே 22 ஆம் தேதி தூத்துக்குடி ரத்த சகதியான நாள். பன்னாட்டு நிறுவனங்களிடம் கையூட்டு வாங்கிக் கொண்ட மத்திய, மாநில அரசுகள் எங்களுடைய மக்கள் 13 பேரை ஈவு இரக்கமற்ற முறையில் சுட்டு கொன்றுவிட்டனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட காட்டுமிராண்டிகளுக்கு இதுவரையில் தண்டனை கிடைக்கவில்லை.
ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற நீதி விசாரணை ஒராண்டு கடந்த நிலையில் இன்று வரையில் நிறைவு பெறவில்லை. இந்த உயிரிழப்புகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் இந்த மண்ணில் இனி ஸ்டெர்லைட் இல்லை என்ற நிலை ஏற்பட வேண்டும். இங்கு நடப்பது ஜனநாயக ஆட்சி என்றால் நிரந்தரமாக ஸ்டெர்லைட் இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும்.
மாணவி நூலினுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி திருப்பலி விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி உள்பட விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுப்பதற்கு அனுமதி அளித்துள்ளதை அரசு திரும்ப பெறவேண்டும். தூத்துக்குடியில் எந்தக் காலத்திலும் ஸ்டெர்லைட் திறக்கப்படாது என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. ஆனால், தேர்தல் முடிவுக்கு பிறகு இங்கு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கப்படலாம் எனும் உறுதியான தகவல்கள் எங்களுக்கு வந்துள்ளது. அப்படி மீண்டும் திறக்கப்பட்டால் சில நாட்களிலேயே உங்களுடைய ஆட்சி இந்த மண்ணில் இருந்து நிரந்தரமாக அகற்றப்படும். இந்த மண்ணில் ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு இடமில்லை என்று அரசு அறிவிக்க வேண்டும்", என்றார்.