தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திராவிட மாடலா..? திண்டாடும் மாடலா..? - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி - தூத்துக்குடி செய்திகள்

Governor Tamilisai soundararajan Criticized TN Govt: டிச.12-ல் வானிலை ஆய்வு மையம் தென்மாவட்டங்களில் மழை வரும் என அறிவித்தும் தமிழ்நாடு அரசும் அலட்சியமாக செயல்பட்டதாகவும், பொதுமக்கள் வெள்ளத்தில் தத்தளித்தபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் சில மணிநேரம் தான் இருந்ததாகவும் கூறிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தென் மாவட்டங்களை அரசு வஞ்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Governor Tamilisai soundararajan Criticized TN Govt
தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 1:37 PM IST

Updated : Dec 25, 2023, 2:40 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் கடந்த 17, 18ஆம் தேதி அதிகனமழை பெய்தது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், தூத்துக்குடி மக்களை சந்திந்து ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி மாநகரிலுள்ள முருகேசன் நகர் பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து அவர் குறைகளைக் கேட்டறிந்து அவர்களின் மனுக்களையும் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் பால் பவுடர் இல்லாமல் குழந்தைகள் உள்ளனர். உடனடியாக பால்பவுடர் ஏற்பாடு செய்ய வேண்டும். இன்னும் பல உதவிகள் மக்களுக்கு தேவையாக உள்ளது. பொதுவாக நிவாரண உதவிகள் கொடுத்துட்டு போவதில் பயன் தரஇயலாது. யார், யாருக்கு என்ன வேண்டும் என அதிகாரிகள், அரசியல்வாதிகள் பார்க்க வேண்டும். தண்ணீர் தேங்கிய இடங்களில் தொற்று நோய் ஏற்படாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார்.

தமிழக அரசு செயல்பாடுகள் பற்றி கூறுகையில், 'அரசின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது. திராவிட மாடலா..? திண்டாடும் மாடலா..? என்று தெரியவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சில மணி நேரங்களில்தான் தூத்துக்குடியில் இருந்துள்ளார். பிரதமர், உள்துறை அமைச்சர் இதனை கேள்விப்பட்டவுடன் பேரிடர் என்டிஆர்எப் அனுப்பியுள்ளார். ஆனால், மத்திய அரசை குற்றம்சாட்டுவதிலேயே இருக்கின்றீர்கள். மத்திய அரசிடம் ரூ.21,000 கோடி, ரூ.6,000 கோடி, ரூ.6,500 கோடி வேண்டும் என்போர் என்ன பணி செய்தார்கள்? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

மன்னிக்க முடியாத குற்றம்?;ஆளுநர் தமிழிசை பரபரப்பு குற்றச்சாட்டு:12ஆம் தேதியே வானிலை அறிக்கை வந்துள்ளது. 17ஆம் தேதிதான் மாவட்ட ஆட்சியர் அனைவரையும் அப்புறப்படுத்துங்கள் என்கின்றார். 4 மணி நேரத்தில் எப்படி அப்புறப்படுத்த முடியும். எங்கு..? என்ன செய்ய முடியும்..? 18ஆம் தேதி முதல் வெள்ளத்தோடு மக்கள் இருக்கும்போது, முதலமைச்சர் அரசாங்க விழாவாக நடத்திக் கொண்டிருக்கின்றார். இது மன்னிக்கவே முடியாத ஒரு குற்றம்.

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தென் மாவட்ட மக்களை தமிழக அரசாங்கம் வஞ்சிக்கிறது. இது மன்னிக்கவே முடியாத ஒரு குற்றம், முற்றிலுமாக தோல்வியடைந்து இருக்கிறார்கள். ஒடிசா அரசு புயல் வரும்போது, 10 லட்சம் பேரை அப்புறப்படுத்தியது. தூத்துக்குடியில் ரூ.10 கோடி, ரூ.15 கோடி வரை குளங்கள் தூர்வாரப்பட்டது என்ன ஆச்சு? என்று கேள்வியெழுப்பினார். தென்பகுதியில் மழையே இல்லாமல் இருந்த பகுதி, இன்று மழை வந்துள்ளது. அந்த தண்ணீரைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை என்ன தொலைநோக்கு திட்டம் இருந்தது..? என அடுக்கடுக்காக பல கேள்விகளை அரசை நோக்கி முன்வைத்துள்ளார்.

வானிலை ஆய்வு மையத்தை குறை கூறுவது அழகல்ல:2019 நாடாளுமன்ற தேர்தல் முடிந்து அடுத்த தேர்தல் வரப்போகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன தொலைநோக்கு திட்டத்தை தொகுதியில் செயல்படுத்தி இருக்கிறார்கள் என மக்கள் கேட்க வேண்டும். வானிலை ஆய்வு மையத்தை குற்றம்சாட்டுவது ஒரு ஆட்சியாளர்களுக்கு அழகல்ல. வானிலை ஆய்வு மையமே எங்கள் மேல் குறை சொல்லாதீர்கள், நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டோம் என்கின்றனர்.

திராவிட மாடல், திராவிட மாடல் என்று மக்களை திண்டாட செய்து திண்டாடும் மாடலாக ஆகிவிட்டது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தென் மாவட்ட மக்கள் நடத்தப்படுகிறார்கள். தமிழக அரசை நேரடியாக நான் குற்றம்சாட்டுகின்றேன். 'குளம், குட்டைகளை தூர்வாரியது குளத்துக்கு போச்சா இல்லை, யாரு குடலுக்கும் போச்சா..' எதுவுமே நடக்கவில்லை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது எனது கருத்தாகும்' எனத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடுவீர்களா..? என்று கேட்ட கேள்விக்கு, நான் அதற்காக வரவில்லை. இதற்குத்தான் என்று என்னை கொச்சைப்படுத்த வேண்டாம். ஜெயிக்க வைக்கிறார்களோ இல்லையோ..? மக்கள் எனக்கு ஆதரவு கொடுத்தார்கள். இப்போது பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஒரு சகோதரியாக நான் வந்து இருக்கிறேன் என்று கூறினார்.

இதையும் படிங்க:ஆளுநர் தமிழிசை தேவையில்லாமல் அரசியல் பேசுகிறார்: அமைச்சர் உதயநிதி காட்டம்!

Last Updated : Dec 25, 2023, 2:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details