தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவரின் வாரிசுக்கு அரசு வேலை - பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

சென்னை: துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த அந்தோணி செல்வராஜின் மகனுக்கு கருணையின் அடிப்படையில் பணி நியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

Government work
Government work

By

Published : Nov 24, 2020, 7:47 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு மே மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின் போது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ. 5 லட்சம், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ. 1.50 லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி உத்திரவிட்டிருந்தார். மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணையின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் ஆணையிட்டார்.

அதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி அன்று மொத்தம் 18 நபர்களுக்கு கருணையின் அடிப்படையில் பணி நியமன ஆணைகளை நேரில் வழங்கி முதலமைச்சர் ஆறுதல் கூறினார். ஸ்டெர்லைட் சம்பவத்தில் உயிரிழந்த அந்தோணி செல்வராஜின் குடும்பத்தில் அவரது மகன் அஜய் ஜோன்ஸ், அரசு வேலை பெறுவதற்குரிய 18 வயதை பூர்த்தியாகாமல் இருந்ததால், வேலை ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது அஜய் ஜோன்ஸூக்கு 18 வயது பூர்த்தியானதால் அவருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் கிராம உதவியாளராக பணிபுரிய கருணையின் அடிப்படையில் பணி நியமன ஆணையை இன்று (நவம்பர் 24) வழங்கி முதலமைச்சர் பழனிசாமி ஆறுதல் கூறினார்.

பணி நியமன ஆணையை பெற்றுக் கொண்ட அஜய் ஜோன்ஸ், தனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நிதியுதவியும், அரசு பணிக்கான பணி நியமன ஆணையும் வழங்கியதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தலைமைச் செயலர் சண்முகம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details