தூத்துக்குடி: கோவில்பட்டியில் ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை சார்பில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளான இன்று (அக்.15) கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை நிறுவனர் தலைவர் ராஜேந்திரன் தலைமையில், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து இரத்த தானம் வழங்கியவர்களுக்கு கேடயங்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார்.
பின்னர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "நடிகர் விஜயை கண்டு திமுக பயப்படுகிறது. அரசு, நடிகர்களிடையே பாரபட்சம் பார்க்கக் கூடாது. அதிமுக ஆட்சி காலத்தில் பாரபட்சம் பார்க்காமல் 10 ஆண்டு காலம் இருந்தது. 2006 முதல் 2011 வரை ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தான் படத்தை வெளியிட முடியும் என்ற நிலை இருந்தது. திமுக ஆட்சி காலத்தில் திரைத்துறை முடங்கி போய் இருந்தது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் 2011-க்கு பின் 10 ஆண்டு காலம் வெளிப்படையான நிர்வாகத்தினால் திரைத்துறை நல்ல முன்னேற்றத்தை பெற்றது. சிறப்பு காட்சி வழங்கிய பின்னர் குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது முறை கிடையாது. தற்போது திரைத்துறை முடங்கி உள்ளதாக அந்தத் துறையைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.