தூத்துக்குடி:தமிழ்நாடு முழுவதுமாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி அதிமுகவின் சார்பில் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் நேற்றைய தினம் (செப் 16) விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் தலைமையில், பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் மதுரை அதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற வருகை தந்திருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் பொதுமக்கள் மற்றும் கட்சியினரிடம் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி, தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி உள்பட ஒட்டுமொத்தமாக முதலமைச்சரின் குடும்பத்தினரை பொதுவெளியில் மிகவும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி இழிவாக பேசியதாகக் கூறப்படுகிறது.