தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’23 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்’ - மீனவ சங்கத்தினர் - நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்த மீனவர் சங்கத்தினர், தங்களது 23 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர்.

மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மீனவ சங்க பிரதிநிதிகள்.
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மீனவ சங்க பிரதிநிதிகள்.

By

Published : Jun 16, 2021, 12:02 PM IST

தூத்துக்குடி: சென்னை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நெல்லை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்ட மீனவ பிரதிநிதிகள், "மீனவம் காப்போம்" அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தர்மராஜ் தலைமையில், தமிழ்நாடு மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை இன்று (ஜூன் 16) நேரில் சந்தித்தனர். அப்போது தங்களது 23 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மனு அளித்தனர்.

அமைச்சர் உடனான சந்திப்புக்குப் பின்னர் ஒருங்கிணைப்பாளர் தர்மராஜ் பேசுகையில், “தமிழ்நாட்டில் நீரோடி முதல் பழவேற்காடு வரை உள்ள அனைத்துப் பகுதி மீனவர்களின் சார்பிலும் இன்று (ஜூன் 16) தமிழ்நாடு மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரை சந்திக்க வந்துள்ளோம். மீனவர்களின் 40 ஆண்டு கால கோரிக்கையான, மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மீனவ மக்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியைச் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திய மீனவ சங்கத்தினர்

அதுபோல மீனவர்களுக்காக பிரத்யேகமாக கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

கடலுக்குள் மீனவர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அவர்களின் உயிரை உடனடியாகக் காப்பாற்றுவதற்கு கடல் ஆம்புலன்ஸ் தேவை இன்றியமையாதது. எனவே, குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு ஒரு கடல் ஆம்புலன்ஸ், இரண்டு ஹெலிகாப்டர்கள் மீனவர்களைக் காப்பாற்றும்பொருட்டு கரையில் தயார் நிலையில் நிற்க செய்ய, கடல் ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்திட வேண்டும்.

மீனவர்களுக்கென்று தனியே கூட்டுறவு வங்கியினை ஏற்படுத்த வேண்டும். மீனவ கிராமங்கள் பல கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, கடல் அரிப்பைத் தடுப்பதற்கு உரிய இடங்களில் ஆய்வுசெய்து தூண்டில் வளைவுகள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவ மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மீனவ சங்கப் பிரதிநிதிகள்

தற்போது டீசல் விலை மிக அதிகமாக இருப்பதால், எந்தவித பொருளாதார தன்னிறைவு சூழலையும் எட்ட முடியாத நிலை உள்ளது. ஆகையால் சர்வதேச அளவில் டீசலுக்கு என்ன விலையோ, அந்த விலையில் மீனவர்களுக்கு டீசல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய கடல் வளக்கொள்கை 2020ஐ திரும்பப் பெற வேண்டும்.

இனிவரும் காலங்களில் மீனவர்களின் நலனுக்காக உருவாக்கப்படும் திட்டங்களோ, வளர்ச்சிக்காக இயற்றப்படும் சட்டங்களோ மீனவர்களைப் பாதிக்கும் வகையில் இருந்திட கூடாது. இவை உள்பட மேலும் 23 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றித்தர வேண்டும்.

இவை குறித்து இடைக்கால பட்ஜெட் தாக்கல்செய்யப்படுவதற்கு முன்பாகவே, அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை சந்தித்த மீனவ சங்கத்தினர், கோரிக்கைகளை நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்வில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க : மீனவர்கள் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை : கனிமொழி எம்பி

ABOUT THE AUTHOR

...view details