தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நாளை (மே 22) ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்குமாறு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, அஞ்சலி நிகழ்ச்சிக்கு அனுமதிகோரி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது அரசுத் தரப்பு மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் தரப்பிலிருந்து இந்த அஞ்சலி நிகழ்ச்சி நடத்த கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் அஞ்சலி நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்தது.
இதன்படி தூத்துக்குடி தெற்கு கடற்கரைச் சாலையில் உள்ள பெல் ஹோட்டலில் நாளை காலை ஒன்பது மணிக்கு தொடங்கி பகல் 11 மணிக்குள் இந்த நிகழ்ச்சியை நடத்தி முடிக்க வேண்டும். காவல் துறையினரிடம் அளிக்கும் பெயர்பட்டியலின் படி இந்த நிகழ்ச்சியில் 250 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சி முழுவதையும் காவல் துறையினர் வீடியோ பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதித்து அஞ்சலி நிகழ்ச்சியை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.