தூத்துக்குடி:ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பகுதியில் ஒரு பரம்பு ஒன்று பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த பகுதியில் ஏராளமாள தொல்லியல் பொருட்கள் கிடப்பதாகவும், அதனை பாதுகாக்க வேண்டும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.
இதனையடுத்து கடந்த 2019 முதல் தொடர்ந்து மூன்று கட்டங்களாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்தன. குறிப்பாக முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், பானைகள், பானை ஓடுகள், வெளிநாட்டு பானை ஓடுகள் என ஏராளமான பொருட்கள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் இருந்து நெல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த நெல்மணியின் வயது 3,200 ஆண்டுகள் பழமையானது என கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது அனைவரையும் சிவகளை பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.
இதற்கிடையில் சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், தற்போது சிவகளை பரம்பு பகுதியில் கடந்த 2 கட்டங்களாக நடந்த அகழாய்வு பணியில் தோண்டப்பட்ட குழியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.