மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் தொழிலாளர் நல சட்டங்களை நான்காம் தர சட்ட தொகுப்பாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு தழுவிய அளவில் நவம்பர் 26ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்களும், தொழிற்சங்க சம்மேளனங்களும் அழைப்பு விடுத்துள்ளன.
இது தொடர்பாக ஐஎன்டியூசி தொழிற்சங்க நிர்வாகி கதிர்வேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மத்திய அரசு தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டங்களை தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. தொழிலாளர் நலனுக்காக இயற்றப்பட்ட சட்டங்களை நான்காம் தர தொகுப்பாக மாற்றியுள்ளது. நாடு முழுவதும் பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால், தொழிலாளர்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். பொதுத்துறை நிறுவனத்திற்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். விவசாய நலனுக்கு எதிரான சட்டங்களையும் மத்திய அரசு திணித்து வருகிறது. நாட்டின் பொருளாதார சக்கரங்களுக்கு முதுகெலும்பாக உள்ள துறைமுகங்களில் தனியார் முதலீட்டை அதிகரிக்கும் விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.