தூத்துக்குடி:கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய பகுதிகளை சுற்றி மானாவாரி விவசாயம் அதிகம் நடந்து வருகிறது. வடகிழக்கு பருவமழையை நம்பித்தான் இப்பகுதி விவசாயம் இருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக வடகிழக்குப் பருவமழை சராசரி அளவை கடந்து பெய்ததால், விவசாயம் பெருமளவு பாதித்தது.
இந்த ஆண்டாவது போதிய மழை பெய்யும் என்ற நம்பிக்கையில், இப்பகுதி விவசாயிகள் மானாவாரியாக உளுந்து, பாசிப்பயிறு, மக்காசோளம், கம்பு போன்றவற்றை சாகுபடி செய்தனர். மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சம் ஏக்கரில் மானாவாரியாக உளுந்து பயிரிடப்பட்டன. முதலில் சில நாட்கள் பருவமழை நன்றாக பெய்ததால் உளுந்து முளைத்து வேகமாக வளரத் தொடங்கின. அதன் பிறகு மழை சரியாக பெய்யவில்லை. இதனால் பெரும்பாலான பயிர்கள் கருகிவிட்டன.
கருகியது போக மிச்சம் மீதமுள்ள பயிர்களை அறுவடை செய்யும் பணியை தற்போது விவசாயிகள் தற்போது தொடங்கியுள்ளனர். விவசாயிகள் உளுந்து பயிர்களை அறுவடை செய்து உலர வைத்து, பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விளைவித்த பயிர்களில் 20 சதவிகித மகசூல் கூட கிடைக்காததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.