தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விளாத்திகுளம் மிளகாய் வத்தலுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை! - தமிழ்நாடு அரசு

விளாத்திகுளம் பகுதியில் மிளகாய் விளைச்சல் கடந்த ஆண்டை விட அதிகமாக இருந்தாலும் மிளகாய் வத்தலுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 28, 2023, 9:42 PM IST

தூத்துக்குடி: விளாத்திகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மிளகாய் வத்தல் விளைச்சலுக்கு பெயர் பெற்றவை. வருடம்தோறும் இப்பகுதியில் மிளகாய் வத்தல் விளைச்சல் கணிசமாக இருந்து வந்த நிலையில், இந்தாண்டும் நல்ல விளைச்சல் தந்துள்ளது.

நல்ல விளைச்சல் இருந்தாலும் 1 கிலோ ரூ.160க்கு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். ஆனால், வியாபாரிகள் இரண்டு மூன்று மடங்காக அதிக விலைக்கு விற்கின்றனர். தங்களின் உழைப்புக்கு ஏற்ற போதிய விலை கிடைக்கவில்லை என்று விளாத்திகுளம் சுற்றுவட்டார விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.

விளாத்திகுளம் பகுதியில் மிளகாய் வத்தலை வைப்பதற்குப் போதிய இட வசதி இல்லாததால், இப்பகுதியில் தமிழ்நாடு அரசு குளிர் சாதன வசதியுள்ள கிடங்கு அமைத்துத் தந்து, அரசே கொள்முதல் செய்தால், தங்களுக்கு உரிய விலை கிடைக்கும் என்றும்; மேலும் தங்களின் வாழ்வாதரம் மேம்படும் எனவும் விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால், பல ஆண்டுகளாக விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறாமலேயே உள்ளது.

விவசாயிகளின் சூழல் அறிந்து அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதே இப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆண்டுதோறும் விவசாயிகள் அதிகளவில் மிளகாய் வத்தல் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் விளைவிக்கப்படும் மிளகாய் வத்தல், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்மை காரணமாக விளைச்சல் சற்று குறைவாகவே இருந்து வந்தது.

இந்நிலையில், இந்தாண்டு பெய்த போதுமான பருவமழையின் காரணமாக இப்பகுதியில் ஓரளவு மிளகாய் வத்தல் விளைச்சல் இருந்தாலும் அதற்கான உரிய விலை கிடைக்கவில்லை என்றும், 1 கிலோ மிளகாய் வத்தலை ரூ‌.160க்கு வாங்கிச் சென்று சந்தைகளில் ரூ.250 வரை வியாபாரம் செய்து அதிக லாபம் பார்ப்பதாகவும் விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

விளாத்திகுளம் மிளகாய் வத்தலுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை!!

தமிழ்நாடு அரசின் தற்போதைய வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடரில் கூட விளாத்திகுளம் மிளகாய் வத்தலுக்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் அதற்கு அடிப்படையாக விளங்கும் மிளகாய் வத்தலை பாதுகாக்க தமிழ்நாடு அரசு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் தலையாய கோரிக்கையாக உள்ளது.

அரசு இதனை சீர்தூக்கி பார்த்து உடனடி நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: ஆசிரியரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முற்றுகை!

ABOUT THE AUTHOR

...view details