தூத்துக்குடி:சாத்தான்குளம் அருகே உள்ள முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சிவராமன். இவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (பிப்.23) மாலை நடைபெற்றது. இந்த நிலையில் திருமண வரவேற்பில் கேக் வெட்டுவதற்காக, சாத்தான்குளத்தில் உள்ள தனியார் பேக்கரியில் அவரது உறவினர்கள் கேக் வாங்கியுள்ளனர்.
பின்னர் இந்த கேக், திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது வெட்டப்பட்டது. அப்போது அந்த கேக் பூஞ்சை பிடித்து காலாவதி ஆகியிருந்தது தெரிய வந்துள்ளது. எனவே உடனடியாக திருமண வீட்டைச் சேர்ந்தவர்கள், கேக் வாங்கிய தனியார் பேக்கரிக்குச் சென்றனர். அங்கு காலாவதியான கேக்கை விற்பனை செய்தது குறித்து உறவினர்கள், பேக்கரி கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பேக்கரி கடை முன்பு குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சாத்தான்குளம் காவல் துறையினர், உறவினர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சாத்தான்குளம் பகுதியில் உள்ள பேக்கரி, ஸ்வீட்ஸ் கடைகள் உள்பட அனைத்து உணவகங்களிலும் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர் முறையான ஆய்வு செய்து, காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்குச் சீல் வைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க:அம்பேத்கர் மாணவர் விடுதியில் தரமற்ற உணவு - புதுக்கோட்டை எஸ்.பி. அலுவலகம் முற்றுகை