தூத்துக்குடி:தென் மாவட்டங்களில், குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாகத் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியே மழை வெள்ளத்தில் மூழ்கியது போல் காட்சியளிக்கிறது.
இந்நிலையில், ஆத்தூர் வழியாகத் தனது சொந்த ஊரான தண்டு பத்து பகுதிக்குச் செல்வதற்காகக் கடந்த திங்கட்கிழமை(டிச.18) காரில் சென்ற தமிழ்நாடு கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகச் செல்ல முடியாத நிலையில் ஏரல் பகுதி வழியாகச் செல்லலாம் என முயன்றுள்ளார். அவருடன் வாகன ஓட்டுநர், கன்மேன் உட்பட ஐந்துக்கும் மேற்பட்டோர் உடன் இருந்துள்ளனர். அப்போது அங்கே ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய அவர்கள் வெள்ளத்திலிருந்து மீள முடியாமல் தவித்துள்ளனர்.
தொடர்ந்து தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டதால், அங்கிருந்து வெளியே செல்ல முடியாமல் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது உறவினர்களுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக தெரியப்படுத்தியுள்ளார். மூன்று நாட்களுக்குப் பிறகு உறவினர் மூலம் எஸ்எம்எஸ் கிடைக்கப்பட்டு வெள்ளத்திலிருந்து மீட்டு வெளியே அழைத்து வரப்பட்டார். அவரை தமிழ்நாடு தீயணைப்புத் துறை இயக்குநர் ஆபாஷ் குமார் உத்தரவின் பெயரில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு படையினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மீட்டுக் கொண்டு வந்துள்ளனர்.