தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டம் கயத்தாறு மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 17 கிராம ஊராட்சிகளில் 4800 பயனாளிகளுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோழி குஞ்சுகள் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர்கள் பாஸ்கரன் மற்றும் மணிகண்டன், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளரிடம் பேசுகையில், "புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அவை தமிழ்நாட்டில் நீடிக்குமா என்பது குறித்து அதிமுகவிற்கு கவலை இல்லை. 2011-16ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியதால் அதிமுக தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்தது.
நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த அத்தனை கட்சிகளும், இன்றும் கூட்டணியை தொடர்கின்றன. தமிழ்நாட்டில் நிலவும் போக்கை பார்த்தால் திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகளும் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளது.
திமுக எம்ஜிஆர் குறித்து பேசாத இழிவான வார்த்தைகளே கிடையாது. எம்ஜிஆரை கேவலப்படுத்திய அவர்கள் இன்று கால சூழ்நிலையால் அவர்கள் வாயாலேயே புரட்சித்தலைவரின் ரசிகன் நான், புரட்சித்தலைவியின் பக்தன் நான் என்று சொல்லக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அரசியலில் பிழைக்க எம்ஜிஆரை ஸ்டாலின் பயன்படுத்துகிறார் எம்ஜிஆரின் பெயரைச் சொல்லாமல் தமிழ்நாட்டில் எவரும் அரசியல் நடத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவர் ஆரம்பித்த கட்சிதான் அதிமுக. எனவே மற்றவர்கள் அவர் குறித்து பேசினால் அது வேடிக்கையாக இருக்கிறது. இன்று எம்ஜிஆர் குறித்து பேசினால்தான் பிழைப்பு நடத்த முடியும் என்ற நிலைக்கு ஸ்டாலினும் தள்ளப்பட்டுள்ளது ஊரறிந்த உண்மையாக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க:திமுக என்னும் தீய சக்தியை விரட்டவே அதிமுகவை தொடங்கினார் எம்ஜிஆர்- சசிகலா தினகரனுக்கு ஒபிஎஸ் அழைப்பு?