தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பார்கள்" - உதயநிதியை சாடிய பிரேமலதா விஜயகாந்த்!

Premalatha Vijayakanth: நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவின் கூட்டணி குறித்த விவரத்தை வரும் ஜனவரி மாதம் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினை சாடிய பிரேமலதா விஜயகாந்த்
உதயநிதி ஸ்டாலினை சாடிய பிரேமலதா விஜயகாந்த்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 12:16 PM IST

பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தூத்துக்குடி: தேமுதிகவின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு, கட்சித் தொண்டர்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, அவரிடம் தென் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொலைகள் நடைபெறுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, இது மன வேதனையான விஷயம் என்றும், கனிம வளக்கொள்ளை போன்ற சட்ட விரோத செயல்கள்தான் கொலைகள் நடைபெறுவதற்கு முக்கியமான காரணம் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தீபாவளி அன்று டாஸ்மாக் கடைகளில் 500 கோடி ரூபாய் அளவில் மதுபானம் விற்பனையாகி உள்ளது. இதை விட ஒரு தலைகுனிவு வேறு ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டு மக்கள் எந்த அளவுக்கு குடிக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று புள்ளி விவரம் கூறியிருக்கிறது.

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. நிச்சயமாக தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை. தேர்தலுக்கு முன்னர் ஓர் நிலைப்பாடு, தேர்தலுக்குப் பின் ஒர் நிலைப்பாடு என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி, யாருக்கும் திருப்தி இல்லாத ஒரு ஆட்சி. தற்போது மக்கள் ஏன் இனி ஓட்டு போட வேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள்" என்று கூறினார்.

மேலும், “முன்பெல்லாம் சென்னையில் மழை என்றால், முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு ஷூ மாட்டிக் கொண்டு, சுற்றிப் பார்த்து விட்டு போய்விடுவார். ஆனால், இப்போது வெளியில் வரவே இல்லை. தற்போது அவரது மகன் உதயநிதி, நல்ல நிலையில் இருக்கக் கூடிய சாலையில் குடை பிடித்துக் கொண்டு வாக்கிங் போகிறார். தமிழில் ஒரு பழமொழி உண்டு, அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பார்கள் என்று, அதை போன்றுதான் உள்ளது திமுகவின் நிலைப்பாடு" என்று சாடினார்.

அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு குறித்து பேசுகையில், "உதயநிதி மட்டும்தான் நீட் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார். இந்தியா முழுக்க நீட் ஒழிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறிவிட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் தெளிவாகி விட்டார்கள். ஆனால், அவர்களை குழப்புவது அரசியல்வாதிகள்தான். அவர்களை குழப்பாமல் இருந்தால், இந்திய அளவில் தமிழ்நாட்டு மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களை வாங்குவார்கள்" என்று கூறினார்.

பின்னர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து பேசும்போது, "ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக, அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று சொல்லி விட்டார்கள். ஆனால், இப்போது கொடுக்க முடியவில்லை. அதனால் தகுதி உடைய பெண்களுக்கு மட்டும் எனக் கூறுகின்றனர். தமிழக பெண்கள் மிகவும் கோபத்துடன் உள்ளனர். இதன் விளைவு தேர்தலில் எதிரொலிக்கும்" என்று கூறினார்.

பின்னர், உதயநிதி சனாதனம் குறித்து பேசிய விவகாரம் குறித்து கேள்வி கேட்டதற்கு, "அதற்கு இந்தியா முழுக்க எவ்வளவு எதிர்ப்பு என்று அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அடுத்தவர்களுக்கு அட்வைஸ் பண்ணும்போது நாம் அப்படி இருக்கோமா என யோசிக்க வேண்டும். கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டு, இவர்களது குடும்பத்தில் யாகம், ஹோமம் போன்ற அத்தனையும் செய்கிறார்கள்" என்று விமர்சித்துப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, 2024ஆம் நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவின் கூட்டணி குறித்து கேட்டபோது, ஜனவரி மாதம் யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதி, எத்தனை வேட்பாளர் என்பதை அதிகாரப்பூர்வமாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என்றும், விரைவில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:“பழங்குடியினர் சமூகத்தினரை பாம்பு பிடிப்பவர்களாக பார்த்து புறக்கணிக்கிறோம்” - ஆளுநர் ஆர்.என்.ரவி

ABOUT THE AUTHOR

...view details