தூத்துக்குடி: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் தமிழக முழுவதும் குறிப்பாக 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், நேற்று(டிச.16) இரவு முதல் பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில், இன்று (டிச.17) காலை 6 மணி முதல் 10 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் தூத்துக்குடியின் பிரதான சாலைகளான தமிழ் சாலை ரோடு, வஉசி சாலை, கடற்கரைச் சாலை, லூர்தம்மாள் புரம், இந்திரா நகர், நிகிலேஷ் நகர், பால்பாண்டி நகர், புஷ்பா நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. சில வீடுகளில் மழை நீர் உள்ளே புகுந்துள்ளது.
இதையும் படிங்க:வெளுத்து வாங்கும் மழை: தண்ணீர் மிதக்கும் குடியிருப்பு பகுதிகள்.. நெல்லையின் முழு நிலவரம்..
மாவட்ட ஆட்சியர் உத்தரவு: தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தினாலும், கனமழை எச்சரிக்கை உள்ளதாலும், பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் அனைத்து வகை கல்வி நிலையங்களுக்கும் நாளை 18.12.2023 ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அறிவித்துள்ளார். உயர்கல்வி வகுப்புகளுக்கு நடைபெறவிருக்கும் தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும் எனவும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
விமானம் ரத்து: தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வரும் சென்னை - தூத்துக்குடி விமானம் மற்றும் பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு வரக்கூடிய விமானம் கனமழை காரணமாக மதுரையில் தரை இறக்கப்பட்டது. மேலும், மாலையில் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வரக்கூடிய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாகத் தூத்துக்குடியில் 5,000 நாட்டுப்படகுகள், 250 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கனமழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நெல்லையில் விடிய விடிய கனமழை.. தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!