தமிழ்நாட்டின் பாரம்பரிய தொழில்களில் ஒன்று உப்பு உற்பத்தி. இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக தமிழ்நாட்டில் தூத்துக்குடியில்தான் உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் கடலோரத்தையொட்டியுள்ள 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் உப்பு உற்பத்தியின் மூலமாக ஆண்டுக்கு 22 லட்சம் டன் உப்பு விளைவிக்கப்படுகிறது. நேரடியாக 50 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 25 ஆயிரம் தொழிலாளர்களும், முறைசாரா உப்பு உற்பத்தி தொழிலை நம்பி 15 ஆயிரம் குடும்பங்களுமாய், சுமார் ஒரு லட்சம் பேர் இத்தொழிலை நம்பியுள்ளனர். இதில், ஆண்களை விட பெண் தொழிலாளர்களே அதிகம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. சில பகுதிகளில் தற்போதும் குடிசைத் தொழிலாக இது நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடியில் கல் உப்பு, சிறுமணி உப்பு, சீனித் தன்மையுடைய தூள் உப்பு (ப்ரீ ஃபுளோ) ஆகிய பதத்தில் உப்பு அரைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இலங்கை, மலேசியா, இந்தோனேஷியா, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கும் வணிகரீதியாக கப்பல்களில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த சூழலில் தற்போது கரோனா தொற்று காலத்தில் கல் உப்பு எனப்படும் "கிறிஸ்டல்" உப்பின் விலை கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்காக விலை அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கும் கல் உப்புக்கும் என்ன தொடர்பு:
கல் உப்பை பயன்படுத்தி தயாரிக்கும் கிருமிநாசினியில் கரோனாவைத் தடுக்கும் திறன் உள்ளது. இதனால் இதனுடைய விலையும், விற்பனையும் தற்போது அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்களிடம் கேட்கையில், “கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 60 விழுக்காடு அளவுக்கு மட்டுமே உப்பு உற்பத்தி நடைபெற்றுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக உப்பை கிருமிநாசினியாக மக்கள் வாங்கி பயன்படுத்துவதால் உப்பின் தேவை அதிகரித்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.