தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பலில் கிரேன் உடைந்து விழுந்து கிரேன் ஆபரேட்டர் பலி தூத்துக்குடிவ.உ.சி துறைமுகத்தில் இருந்து பனாமா நாட்டில் உள்ள கியானா கப்பலில் எகிப்து நாட்டுக்கு நிலக்கரியானது ஏற்றுமதி செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த பணி எஸ்தோ லேபர் காண்ட்ராக்ட் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வந்து உள்ளது. தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள மீனவர் காலனி பகுதியைச் சேர்ந்த ராயப்பன் மகன் பாரத் (40) என்பவர், கிரேன் மூலமாக லாரிகளில் இருந்து நிலக்கரியை கப்பலில் ஏற்றி கொண்டிருந்தார்.
அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கிரேன் உடைந்து கப்பலின் உள்ளே விழுந்துள்ளது. அதைத் தொடர்ந்து, உடனடியாக மற்றோரு கிரேன் மூலமாக பாரத் என்பவர் மீட்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து, மீட்கப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், ரத்தப் போக்கு ஆகி உள்ளது.
பின்னர், சக ஊழியர்கள் அவரை மீட்டு வ.உ.சி துறைமுக ஆம்புலன்ஸ் மூலமாக துறைமுக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.
ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தெர்மல் நகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வெளிதுறைமுக கப்பல் வ.உ.சி துறைமுகத்திற்குள் வரும் பட்சத்தில், கப்பலில் உள்ள பொருட்களை இறக்கும் போதும், ஏற்றும் போதும் பாதுகாப்பு அதிகாரிகள் கப்பலில் சோதனையிட வேண்டும்.
அதன் பின்னரே கப்பலில் உள்ள பொருட்களை இறக்குமதி, ஏற்றுமதி செய்ய வேண்டும். ஆனால் தற்போது அதிகாரிகள் சோதனை செய்வதில்லை என்றும் அதன் வெளிப்பாடு தான் இந்த கோர சம்பவத்திற்கு காரணம் எனவும் வ.உ.சி துறைமுக தொழிலாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் எதிபாராத விதமாக நிலக்கரி ஏற்றுமதி செய்யப்பட்ட கப்பலில் கிரேன் உடைந்து விழுந்து, கிரேன் ஆபரேட்டர் பாரத் உயிரிழந்த சம்பவம் துறைமுக தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி.. ஆந்திராவில் பந்த்.. கலவரத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியினர்!