தூத்துக்குடி:விளாத்திகுளம் அருகேயுள்ள என். வேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முத்துப்பாண்டி - முத்துலட்சுமி தம்பதியினர்கள். இவர்கள் இருவரும் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகள் ஆவர்.
முத்துப்பாண்டி முதலில் சைக்கிள் மூலமாக துடைப்பம் விற்பனை செய்து வந்தார். முத்துலட்சுமி உள்ளுரில் உள்ள ஊரக நூலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்திலும், அரசு உதவி தொகை ஆகியவற்றையும் வைத்து, இருவரும் தங்களது குடும்பத்தை நடத்தி வந்தனர்.
வறுமையில் தவிக்கும் மற்றுத்திறனாளிகள்
சமீபத்தில் உடல்நலக்குறைவால் முத்துபாண்டிதவித்து வந்த நிலையில், அவரால் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் முத்துலெட்சுமி வேலை பார்த்து வந்த ஊராக நூலகத்தில் நாளொன்றுக்கு 50 ரூபாய் மட்டும் தான் ஊதியமாக வழங்கியுள்ளனர்.
ஊதியத்தை உயர்த்தி கேட்டபோது மறுப்பு தெரிவித்ததால் முத்துலட்சுமியும் வேலையை விட்டு நின்று விட்டார். இதனால் அரசு உதவி தொகையை மட்டும் வைத்து குடும்பத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அரசு உதவிக்காக அலையும் மாற்றுத்திறனாளி தம்பதியினர் இதில் வீட்டுவாடகை, மருத்துச்செலவுக்கு அதிக பணம் செலவு செய்ய வேண்டிய நிலை இருப்பதால் போதிய வருவாய் கிடைக்காமல் தம்பதியினர் வறுமையில் தவித்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மனு
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தங்களது வறுமையிலிருந்து விடுபட, பெட்டிக்கடை வைத்து நடத்துவதற்கு கடன் உதவி வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கடந்த ஆண்டு எட்டயபுரத்தில் உள்ள கனரா வங்கியில் ரூ. 25 ஆயிரம் மானியத்தொகையுடன், ரூ. 1 லட்சம் ரூபாய் கடன் தொகை பெற்றுக்கொள்ள பரிந்துரை செய்தது.
ஆனால் வங்கி சார்பில் தங்களுக்கு எவ்வித கடிதமும் வரவில்லை எனக் கூறி கடன் வழங்க மறுத்துள்ளது.
கடன் தான் கிடைக்கவில்லை, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஸ்கூட்டர் வழங்கினால் அதனை வைத்து ஊர், ஊராக சென்று துடைப்பம் விற்று வறுமையை போக்கி கொள்கிறோம் என்று முத்துப்பாண்டி மீண்டும் மனு அளித்துள்ளார். அந்த மனு மீதும் தற்போது எந்த நடவடிக்கையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகையும், அரசு வேலையும்
அரசு கொடுக்கும் உதவி தொகை வீட்டு வாடகை, மருத்துவ செலவுக்கு மட்டும் பயன்படுவதால் பல நேரங்களில் இந்த பட்டினியாக கிடக்கும் நிலைக்கு தம்பதியினர் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், உதவி கோரி பல மனுக்கள் கொடுத்தும், பலன் கிடைக்காமல் இருப்பதாக வேதனையுடன் கூறுகின்றனர்.
அரசு உதவி தொகையை மட்டும் வைத்து குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதால், பெட்டி கடை வைப்பதற்கான கடன் உதவி, மூன்று சக்கர வாகனம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ள முத்துலட்சுமிக்கு அரசு வேலை கொடுக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு: முதலமைச்சர் முடிவெடுப்பார் - அமைச்சர் அன்பில் மகேஷ்