தூத்துக்குடி:திமுக வட்டச் செயலாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் இதனால், வசித்து வரும் வாடகை வீட்டிற்கு கூட செல்ல முடியாமல் வீதி வீதியாக அலைந்து வருவதாகவும் முனீஸ்வரி என்பவர் புகார் அளித்துள்ளார். தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு இது தொடர்பாக அப்பெண் இன்று (ஜன.13) கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 7வது தெருவில் வசிப்போர் பெரியசாமி-முனீஸ்வரி தம்பதியினர். இவருக்கு 3 மகன்கள்மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், இவ்விருவரும் தங்களது 15 வயது மகள் மற்றும் 10 வயது மகனுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து திமுக வட்டச் செயலாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது குடும்பத்தை அச்சுறுத்தி வருவதாகவும் ஆகவே, இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு ஒன்றை அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முனீஸ்வரி, “சிறுவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, கிருஷ்ணராஜபுரம் பகுதி திமுக வட்டச் செயலாளர் ஜெயக்குமாரின் மகன்கள் இருவரும், தனது 10 வயதாகும் இளையமகனை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, எனது இளையமகன் வீட்டிற்கு ஓடிவந்து நான் வீட்டில் இல்லாத நேரத்தில் அவனது சகோதரனிடம் அழுதுகொண்டே நடந்தவற்றை கூறியுள்ளார்.
என் இரு மகன்களும் தம்பி மீதுள்ள பாசத்தில் ஏன் அடித்தீர்கள்? என ஜெயக்குமாரின் மகன்களிடம் கேட்டபோது இருதரப்பினருக்கும் வாய் தகராறு முற்றிய நிலையில், கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இருதரப்பினரும் காயமடைந்தனர். தனது மகனுக்கு ஏற்பட்ட காயத்தை தொடர்ந்து ஆவேசம் அடைந்த திமுக வட்டச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட 10 நபர்கள் எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து எனது பிள்ளைகளை அடித்தனர். அதோடு, பொருட்களையும் அடித்து சேதப்படுத்தினர்.
அப்போது அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த வடபாகம் காவல் நிலைய போலீசாரைக் கண்டதும் அக்கும்பலினர் தப்பியோடினர். இதனால் படுகாயமடைந்த எனது மகனை போலீசார் கூறிய படி, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழிமறித்த ஜெயக்குமார் மற்றும் அவரது தம்பி உள்ளிட்டோர் என் மகனை கொலை செய்யப்போவதாக மிரட்டினர்.