தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடியை ஸ்பிக் தொழிற்சாலை இயக்குநர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம் வழங்கினர்.
மேலும், கரோனா தடுப்பு சிகிச்சைக்காக ரூ.27 லட்சம் ரூபாய் மதிப்பில் 400 ஆக்ஸிஜன் ஃப்ளோ மீட்டர் மருத்துவ உபகரணங்களையும் இலவசமாக வழங்கினர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கனிமொழி பேசுகையில், "தூத்துக்குடியில் கரோனா சிகிச்சைக்காக தொடங்கப்பட்டுள்ள சித்த மருத்துவப் பிரிவில் நோயாளிகளுக்கு யோகா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பு கிராமப்புறங்களில் அதிகரித்து வருவதை அண்மைக் காலமாகப் பார்க்க முடிகிறது. எனவே, அங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு 1,845 பகுதிகளில் 36 குழு மூலம் தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்தியுள்ளோம். மருத்துவமனையில் கரோனா நோயாளிக்கு ஆக்ஸிஜன் வழங்குவதை கண்காணிப்பதற்கு தனியாக செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.