தூத்துக்குடி: கழுகுமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் மகன், கழுகுமலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி சிறுவன் பள்ளிக்கு வழக்கம் போல சென்றுள்ளார். அப்போது வகுப்பில் இருந்த ஆசிரியை மாணவர்களிடம் வீட்டுப் பாட நோட்டை கேட்டுள்ளார்.
அப்போது அனைத்து மாணவர்களும் தங்கள் செய்த வீட்டுப்பாடங்களை ஆசிரியையிடம் காண்பித்து கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர்கள் அனைவரும் பிரார்த்தனைக்கு சென்று திரும்பி வந்த போது, பாதிக்கப்பட்ட மாணவரிடம் ஆசிரியை ஹோம் ஒர்க் நோட்டை எடுத்து வரும்படி கூறியதாகவும், இதையடுத்து மாணவர் தனது பேக்கில் நோட்டை பார்த்தபோது, அது காணாமல் போய் இருந்ததாக கூறப்படுகிறது.
அதையடுத்து தன்னுடைய நோட்டை காணவில்லை என்று மாணவர் கூறியதாகவும், இதனால் கோபமடைந்த ஆசிரியர் ஹோம் ஒர்க் செய்யாமல் பொய் சொல்கிறாயா? என்று கம்பால் மாணவனை அடித்ததாகவும், இதில் மாணவனுக்கு கை மற்றும் முதுகில் லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மாணவர் கழுத்தில் அடிக்க முயன்ற போது மாணவர் தடுக்கவே, அவருடைய சட்டையை பிடித்து வெளியே தள்ளியது மட்டுமின்றி, "எனக்கு இருக்கும் கோபத்தில் உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன்" என்று ஆவேசத்துடன் கூறியதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாணவனின் தாயாரை செல்போனில் அழைத்து, "உங்கள் மகன் ஹோம் ஒர்க் செய்யவில்லை, ஆகவே உங்கள் மகனை வந்து கூட்டி செல்லுங்கள்" எனக் கூறியதாகவும், தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து மாணவனின் தாயார் பள்ளிக்கு வந்து, இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தது மட்டுமின்றி, கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசாரும் சமாதானமாக செல்லும்படி கூறியதாக கூறுகின்றனர். இதையடுத்து சைல்ட் லைன் (Childline - 1098) மூலமாக புகார் கொடுத்துள்ளார். அவர்களும் நேரில் வந்து விசாரணை நடத்தியதில் ஆசிரியை தாக்கியது தெரியவந்துள்ளது.