தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இது மத்திய பாசிச பாஜக அரசுக்கு எதிரான தேர்தல்: வைகோ ஆவேசம் - மதிமுக பொதுச்செயலாளர்

தூத்துக்குடி: நாடாளுமன்றத் தேர்தல் மத்திய பாசிச பாஜக அரசுக்கு எதிரான தேர்தல் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாகப் பேசியுள்ளார்.

தூத்துக்குடி பிரச்சாரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

By

Published : Mar 23, 2019, 7:46 AM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஸ்ரீ வைகுண்டத்தில் நேற்று பரப்புரையை தொடங்கினார்.

தொடர்ந்து, திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனையடுத்து தூத்துக்குடியில் நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, "தூத்துக்குடியில் மே 22ஆம் தேதி என்பது கறுப்பு நாள். ஸ்டெர்லைட் என்னும் பெருநிறுவனத்துக்காக, பதினோராம் வகுப்பு மாணவி ஸ்னோலின் உள்பட 13 பேரை துப்பாக்கியால் கொடூரமாகச் சுட்டுக் கொன்றனர்.

ஸ்டெர்லைட் கலவரம் என்பது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி. பேரணியாக வந்த மக்கள் ஆட்சியர் அலுவலகம் வருவதற்கு முன்பாகவே, காவல் துறையினரே அவர்களின் வாகனங்களுக்கு தீவைத்து, கலவரம் ஏற்பட்டது போன்ற சூழ்நிலையை உருவாக்கிவிட்டனர். இதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில்தான் காவல் துறையினரே கூலிப்படையினராக மாறி 13 அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களின் சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டாமா? வாக்காளர் ஆகிய உங்களிடம் நீதி கேட்கிறேன். நீங்களும் நீதி கேளுங்கள்.

மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி வரியால் வணிகம் நசிந்து போய்விட்டது. நீட் தேர்வு மாணவர்களின் கல்வியைத் தொலைத்து விட்டது. ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கொண்டுவந்து தமிழ்நாட்டை நாசமாக்க முடிவு செய்துவிட்டனர்.

மேலும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு மறைமுகமாக அனுமதி அளித்துவிட்டது. இந்த திட்டங்களால் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பெரும் லாபமும் கிடைக்கும். அதிலிருந்து ஆதாயம் அனுபவித்துக் கொள்வதற்காகவே மத்திய அரசு இந்த வேலைகளைச் செய்கிறது.

ஆனால் மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்கள் பாசன வசதியின்றி அழிந்துபோகும்.

இட ஒதுக்கீட்டுக்காக அண்ணா, பெரியார் உள்ளிட்டோர் போராடி ஒரு பன்முகத் தன்மை கொண்ட சமுதாயத்தை, சமத்துவத்தை உருவாக்கினர்‌. ஆனால் இன்று அதை மத்திய அரசு சிதைத்துவிட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய காந்தியின் படத்தை துப்பாக்கியால் சுட்டும், காலால் மிதித்தும் அவமானப்படுத்தினர். அந்த செயலுக்கு பிரதமர் மோடி சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. அப்படி என்றால் அவர் பிரதமராக இருக்க என்ன அருகதை இருக்கிறது.

இந்த தேர்தல் பாசிசத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல். எனவே வாக்காளர்களாகிய நீங்கள் சிந்தித்து வாக்களியுங்கள். மத்திய பாசிச அரசுக்கு எதிராக உங்களது வாக்குகளைத் திரட்டுங்கள்" என கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details