தூத்துக்குடி:முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா காலங்களில் தினசரி காலை மற்றும் மாலையில் சுவாமியும், அம்பாளும் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ஆம் திருவிழா அன்று சுவாமி சண்முகர் தங்க சப்ரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 8ஆம் திருவிழா அன்று சுவாமி சண்முகர் பச்சை பட்டு உடுத்திய கோளத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழா நாட்களில் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டகள் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சூரிய காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்தும், வேல் குத்தியும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10ஆம் திருநாள் தேரோட்டம் இன்று (மார்ச்.6) காலையில் நடந்தது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. அதிகாலை 5.30 மணிக்கு விசுவரூப தீபாரானையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. இதன் பின்னர் தொடங்கிய தேரோட்டத்தில் முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்று நான்கு ரதவீதிகளிலும் பவனி வந்தது.