TMB வங்கியின் தலைமை செயல் அதிகாரி செய்தியாளர்கள் சந்திப்பு தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது தூத்துக்குடியை தலையிடமாக கொண்டு 1921 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தனியார் துறை வங்கி ஆகும். தொடர்ந்து 100 வருடங்களுக்கு மேலாக லாபம் ஈட்டி வரும் இந்த வங்கியானது 536 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டின் 17 மாநிலங்கள் 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்தி ஏறத்தாழ 50 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று (ஜூலை 24) 2023-24 நிதி ஆண்டின் முதல் காலாண்டின் நிதிநிலைத் தணிக்கை செய்யப்படாத முடிவுகள் இறுதி செய்யப்பட்டன. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் தணிக்கை செய்யப்படாத முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார்.
இதுகுறித்து வங்கியின் நிர்வாக அதிகாரி மற்றும் வங்கியின் தலைமை செயல் அதிகாரியான கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கடந்த ஜூன் 2022 முதல் 2023 ஜூன் வரை டெபாசிட் 8.73 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அட்வான்சஸ் 10.26 சதவிகிதமும், மொத்தமாக வர்த்தகம் கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தை காட்டிலும் தற்போது உள்ள ஜூன் மாதத்தில் 9.40 சதவிகிதம் அதிகரித்து உள்ளது.
வங்கியானது, தொன்று தொட்டு சிறுபான்மையினர், விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு கொண்டு இருக்கிறது. 261 கோடி ரூபாயை நிகர லாபமாக வங்கி ஈட்டியுள்ளது. கடந்த வருடம் 234 கோடி ரூபாயாக இருந்தது. இது 11.54 சதவிகிதம் உயர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, கடந்த மாதத்தில் TMB வங்கியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "வருமான வரித்துறையினர் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் ரெய்டு நடத்தவில்லை. அவர்கள் சர்வே அதாவது வருமான வரித்துறையினர் நேரடியாக வங்கிக்கு வந்து பண பரிவர்த்தனை குறித்த ஆய்வை மேற்கொண்டார்கள்.
ஒரு சில வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்தார்கள். அதில் ஒரு சில குறைகள் இருப்பதாக கூறினார்கள். இதில் வருமான வரித்துறையினர் சுட்டிக்காட்டிய குறைகள் அனைத்தும் முழுமையாக களையப்பட்டு அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
பின்னர் பத்திரிகை செய்தியில் கூறியுள்ளதாவது, "கடன்கள் மூலம் கிடைக்கப்படும் வட்டி வருவாய் ஆயிரத்து 2 கோடி ரூபாயில் இருந்து ஆயிரத்து 156 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதர வருவாய்கள் 140 கோடி ரூபாயிலிருந்து 167 கோடி ரூபாயாகவும், வாரா கடன் 1.69 சதவீதத்தில் இருந்து 1.56 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கியின் வைப்புத் தொகை 43,233 கோடி ரூபாயிலிருந்து 47 ஆயிரத்து 8 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், இந்த காலாண்டில் ஆறு புதிய கிளைகள் சந்தை வணிகத்தை ஈர்க்க எம்.எஸ்.எம்.இ. கடன் (MSME Loan) செயலாக்க மையம் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடியில் துவங்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:EPFO Intrest Rate : வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?