தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அறநிலையத்துறை இணை ஆணையர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு! - 6 பேர்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிலையை திருடிவிட்டு மீண்டும் அதே இடத்தில் வைத்ததாக எழுந்த புகாரின் பேரில், அறநிலையத்துறை இணை ஆணையர் உள்ளிட்ட ஆறு பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இணை ஆணையர் உள்ளிட்ட 6 பேர் மீது வாக்குப்பதிவு

By

Published : May 2, 2019, 2:42 PM IST

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடான சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட கோயில் என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் இந்த கோயிலில், மூலவர் சிலைக்கு முன்பு நந்தி சிலையும் அதன் அருகில் இந்திர, தேவ மயில்களின் இரு சிலைகளும் அமைக்கப்பட்டிருந்தன. இதில் தொன்மை கொண்ட தேவ மயில் சிலை, கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி சிசிடிவி இணைப்பை துண்டித்துவிட்டு, அர்த்தசாம பூஜை முடிந்து கோயிலின் நடை சாத்திய பின்னர், இரவோடு இரவாக மாற்றப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

அதற்கு பதிலாக ஏற்கனவே செய்து தயாராக வைக்கப்பட்டிருந்த, புதிய மயில் சிலை ஒன்றை அங்கு வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சிலை மாற்றம் குறித்து, கோயிலின் இணை ஆணையர் பரஞ்சோதிக்கு தகவல் தெரிந்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த ஆன்மீக ஆர்வலர் ரங்கராஜன் என்பவர், இந்துசமய அற நிலையத்துறையின் ஆணையர் ஜெயாவுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினார். காவல்துறையில் புகார் அளிக்காமல் அதனை மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

கோயிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அந்த பழமையான மயில் சிலையை, 15 தினங்கள் கழித்து மீண்டும் சிசிடிவி இணைப்பை துண்டித்து யாருக்கும் தெரியாமல் கோயிலுக்குள் இரவோடு இரவாக கொண்டு வரப்பட்டு அங்கேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சிலையை எடுத்து சென்றபோது மயிலின் தலை உடைந்து சேதமடைந்ததாகவும் தெரிகிறது. இதனை மறைக்க சிலையின் மேல் வெள்ளை துணி போட்டு மூடி வைத்திருந்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து 10 மாதங்கள் கழித்து துறை ரீதியான விசாரணை என்ற பெயரில் விசாரணைக்கு சென்ற அதிகாரி திருமகள் சட்ட விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளார்.

அதன்பின்னரும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில், அண்மையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலுவிடம் திருச்செந்தூர் கோயிலின் இணை ஆணையர் பாரதி என்பவர், சிலை மாற்றப்பட்ட விவகாரத்தை விரிவான புகாராக தெரிவித்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரித்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில், மயில் சிலை மாற்றப்பட்ட சம்பவத்தில், கோயிலின் முன்னாள் இணை ஆணையர் பரஞ்ஜோதி, சூப்பிரண்டு பத்மனாபன், திருமேனி காவல் பணியாளர்கள் சுரேஷ், ராஜா, குமார், சுவாமிநாதன் ஆகிய ஆறு பேர் மீது திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details