தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூரில் உள்ள தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.
இதில் பூப்பந்தல் அமைப்பு, சுமைதூக்கும், தையல், மண்பாண்டம், கூடை பின்னுதல், இருசக்கர வாகன பழுதுநீக்கும் தொழிலாளர்கள் என ஆயிரத்து 652 பேருக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன. கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர்கள் பாஸ்கரன், மணிகண்டன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சத்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ஐந்தாயிரத்து 338 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் 27 பேருக்கு உறுதிசெய்யப்பட்டு ஒருவர் இறந்த நிலையில் 26 பேர் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 14 நாள்களாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில் ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் சென்னை உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களின் காரணமாக புதியதாக மூன்று பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.