தூத்துக்குடி: கோவில்பட்டி பாஜக விவசாய அணி வடக்கு மாவட்ட துணைத் தலைவராக உத்தண்டராமன் செயல்பட்டு வருகிறார். இவர் தனது ஆதரவாளர்கள் சிலருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரதம்பட்டி ஊராட்சி மன்றத்தின் செயலாளராக கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு தங்கராஜ் என்பவர் பணியமர்த்தப்பட்டார்.
இவர் வரதம்பட்டி ஊராட்சியிலேயே 17 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி பல்வேறு ஊழல், மோசடிகளை செய்துள்ளார். பணியில் சேரும்போது வறுமைக்கோட்டிற்கு கீழிருந்த அவர், தற்போது பன்மடங்கு சொத்துக்களோடு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
அவர் ஊராட்சிமன்றச் செயலாளராக பணியில் இருக்கும்போதே அவருடைய மனைவி சாந்தி என்பவரின் பெயரில் அரசு ஒப்பந்தம் பதிவு செய்து அரசு நிதிகளை சட்டத்திற்கு விரோதமாகப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளார். இதற்கு ஊராட்சி ஒன்றியத்தின் ஆணையாளர், பொறியாளர், தனி அலுவலர் ஆகியோரும் உடந்தையாக செயல்பட்டுள்ளனர்.