தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைக்கிணறு பகுதியைச் சேர்ந்த தங்கபெருமாள் மகன், சதீஷ்குமார் (33). இவர் பணிக்கநாடார் குடியிருப்பில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 6 மாத ஆண் குழந்தை உள்ளது.
வழக்கமாக பள்ளிக்கு பள்ளி வாகனத்தில் சென்று வருவார். இந்நிலையில், கடந்த நவம்பர் 20ஆம் தேதி மாலையில், தனது இருசக்கர வாகனத்தில் பள்ளியிலிருந்து பரமன்குறிச்சி வழியாக வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, நடுநாலுமூலைக்கிணறு அருகில் வரும்போது மாடு குறுக்கே வந்ததால், நிலைதடுமாறி ஆசிரியர் சதீஷ்குமார் சாலையில் கீழே விழுந்து, தலையில் பலத்த காயமடைந்துள்ளார். இதனையடுத்து, அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவனைக்கும், மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்ததால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, மூளை செயலிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்திலும் சதீஷ்குமாரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலை அவரது உடல் உறுப்புகளான இதயம், கண்கள், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.